விஐபி பூஜையறை

விஐபி பூஜையறை

கருத்துகள்

15:42:46

Tuesday

2012-05-08

வயலின் இரட்டையர்களில் (லலிதா-நந்தினி) ஒருவரான லலிதா, தம்முடைய ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.   தினமும் நான் வயலின் வாசிக்கறது வெறும் பயிற்சி அல்ல; என்னைப் பொறுத்தவரை அதுவே பூஜைதான். ஹம்ஸத்வனி, கல்யாணின்னு ஒவ்வொரு ராகத்தையும் வாசிக்கும்போது அந்தந்த ராகப் பூக்களை மானசீகமாக இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த பூஜையை இறைவனும் அங்கீகரிக்கிறார் என்றே நினைக்கிறேன். காரணம், ஒருமுறை பிள்ளையாருக்கு அறுகம்புல் போட்டு, ஹிந்தோள ராகத்தில் ஒரு பாட்டு பூஜையை நான் செய்தேன்; அடுத்த நாள் கோயமுத்தூர்ல கச்சேரி முடிஞ்சு அவங்க தந்த பரிசு –  தஞ்சாவூர் ஓவிய பாணி பிள்ளையார்! என் பூஜை மண்டபத்தின் இருபுறங்களிலும் காஞ்சி பெரியவரும் சாந்தானந்த சுவாமிகளும் ஆசியளிக்கறாங்க. அனுமனை நவவியாகரண பண்டிதர்ம்பாங்க. அவரும் என் பூஜையறையை சிறப்பிக்கிறார். எங்க குடும்ப நண்பர் ரவிசங்கர் சங்கீத மும்மூர்த்திகள் பொம்மைகளை எனக்கு பரிசளித்தார். அந்த பொம்மைகளையும் நான் பூஜை செய்துகிட்டு வர்ரேன். அந்த மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் அவதரித்த இடத்தில் நடந்த போட்டியில் நானும் என் சகோதரி நந்தினியும் தங்க காமாட்சி பதக்கத்தை பரிசா பெற்றோம். அதை காஞ்சி மகாசுவாமிகள் ஆசிர்வதித்து அளித்தார். அதோடு ஒரு மாதுளம்பழ பிரசாதத்தையும் தன் தலையில் சில விநாடிகள் வைத்துக்கொண்டு, பிறகு பிரசாதமாகத் தந்தது மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பதக்கமும் என் பூஜையறை பொக்கிஷம்தான்.

 அதேமாதிரி, காமாட்சி அம்மன், ராஜமாதங்கி, ஹயக்ரீவர், கூத்தனூர் சரஸ்வதின்னு கலை தெய்வங்கள் என் பூஜையறையில் நிறைந்திருக்காங்க. என்னோட அம்மா சுப்புலட்சுமி முத்துசாமியும் தாத்தா லட்சுமிநாராயண ஐயரும் என்னோட குருக்கள். தாத்தா வெளியூரில் இருந்த ஒரு சமயம் எங்களுக்கு பிரஞ்சு கலாசார கழகத்தில் வாசிக்க அழைப்பு வர அரங்கேற்றமே ஆகாத நிலையில் தாத்தா எங்களுக்கு தொலைபேசியிலேயே வாழ்த்து சொல்லி சென்னை-பெசன்ட் நகர் பிள்ளையார் கோயிலில் இரண்டு பாடல்கள் வாசித்து விட்டு பின் அந்த வாய்ப்பை ஒத்துக் கொள்ளச் சொன்னார். அதன்படி நாங்கள் அங்கு கச்சேரி செய்தோம். அதாவது எங்களோட அரங்கேற்ற கச்சேரி நடந்தது ஒரு பிள்ளையார் கோயிலில். ஆடியன்ஸ் – பிள்ளையாரும் நாலைந்து பக்தர்களும்! ஆனால் அடுத்த வாய்ப்பான கலாசார கழக கச்சேரியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்!

  ஒரு சிவராத்திரி தினத்தன்று, காசியில், கங்கை நதியில், மிதக்கும் மேடையில் எங்கள் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார், ‘அன்னலட்சுமி’ சாந்தானந்தர்.  ஜொலிக்கும் தீபங்களிடையே படிகளில் மக்கள் அமர்ந்து எங்கள் கச்சேரியைக் கேட்டதை என்னால மறக்கவே முடியாது. அதேபோல் ப்ளோம் ஃபான்டெய்ன் எனும் தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியாவிலிருந்து சென்று முதன்முதலில் நான் கச்சேரி செய்ததை அந்நாட்டு பாராளுமன்றத்திலேயே அறிவித்ததும், லண்டன் பிபிசியில் அதே போன்று முதன்முதலில் கச்சேரி செய்ததும் புதுக்கோட்டை சாந்தானந்தரின் அருளே. தயானந்தர் உடல் நலம் குன்றி ஓய்வெடுத்தபோது அவருக்காக பிரத்யேகமாக கச்சேரி செய்ததும் சத்யசாய்பாபா முன் இரண்டு மணி நேரம் வாசித்ததும் நாங்கள் செய்த பாக்கியமே. சாந்தானந்தர் ஆதியில் வழிபட்ட புவனேஸ்வரி விக்ரகபடம், கோல்ஹாபூர் மகாலட்சுமி, என் குலதெய்வம் பெரியாண்டவர், என் பெற்றோர் தந்த சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோர் என் பூஜை குடும்பத்து உறுப்பினர்கள்! ரஜினிகாந்த், தன் அறுபதாம் கல்யாணத்தன்று அவர் வீட்டில் நாங்கள் செய்த கச்சேரியைப் பாராட்டி அளித்த பாபா டாலரையும் போற்றிப் பாதுகாத்து வருகிறேன்.   ஒவ்வொரு முறையும், ‘எங்களுக்குள் அமர்ந்து நீங்கள்தான் வாசிக்கிறீர்கள்’ என்று சாந்தானந்தரை மானசீகமாக வேண்டிக்கொண்டுதான் கச்சேரியை ஆரம்பிப்போம். எங்கள் வயலின் பெட்டியில்கூட அவர் படத்தைத்தான் வைத்திருக்கிறேன்.
  குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை; திருவருள் இருந்தால் குறைவொன்றும் இல்லை என்பது என் திடமான நம்பிக்கை. பார்க்க முடியாத கடவுளை அந்த குருவைப் பார்ப்பதன் மூலம் தரிசிக்கும் நிறைவைப் பெறுகிறேன்.
-ந.பரணிகுமார் படம்: ரமேஷ்

 

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=439&cat=3

வயனா, வாய்ப்பாட்டா? – Review, Dinamani 6th May 2012

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=593422&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE,%20%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE?

வயனா, வாய்ப்பாட்டா?

 

தென்னிந்திய இசையை வாத்திய இசை மற்றும் குரலிசை என இரு வகையாகக் கருதலாம். இதில் வீணை, இசைக்கடவுளான சரஸ்வதியின் கரங்களில் தவழும் ஒரு தெய்வீக இசைக்கருவி. எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியாததாலோ என்னவோ வீணையை பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வேத காலம் தொட்டு புழங்கி வந்த இந்த வாத்தியம் இப்பொழுது வழக்கொழிந்து போய்விடுமோ என்ற நிலையில் உள்ளது.  ஜெர்மனி நாட்டில் உருவாகி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் சகோதரரான பாலுஸ்வாமி தீட்சிதரால் தென்னிந்திய இசைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு திகழும் வயலினின் நிலை என்ன? தனிக்கச்சேரிகள் இல்லை என்றாலும் பெரும்பாலும் பக்கவாத்தியமாக இசை மேடைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது. கர்நாடக மற்றும் மெல்லிசைக் கச்சேரிகளில் முக்கியமான வாத்தியமாகக் கருதப்படுகிறது.  பக்கவாத்தியம் வாசிக்கும்போது பாடுபவரின் இயல்பை ஒட்டித்தான் தனது திறமையை வயலின் கலைஞர் வெளிப்படுத்தமுடியும் என்பது எழுதப்படாத சட்டம். இந்நிலையில் சில வயலின் கலைஞர்கள், தனிக்கச்சேரி செய்வதை விரும்புகின்றனர். குரல் வளம் இருந்து விட்டால் குரலிசைக்கு மாறிவிடுகின்றனர். வாய்ப்பாட்டில்தானே வார்த்தைகளை கேட்டு அனுபவிக்கமுடியும், தவிர, தென்னிந்திய இசையின் பெருமையே அதன் சாகித்ய மகிமையில்தானே இருக்கிறது!  சமீப காலமாக, முன்னணி வயலின் விற்பன்னர்களாக திகழ்ந்த ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் வாய்ப்பாட்டுக் கலைஞர்களாக அங்கீகாரம் பெற்றுவிட்டனர். அக்கரை சுப்புலஷ்மி சகோதரிகள், அமிர்தா முரளி, கே.பி.நந்தினி போன்ற பலர் வாய்ப்பாட்டுக்கு மெல்ல மாறி வருகின்றனர்.  ஆனால் இந்த சூழலிலும் வயலினைப் பக்கவாத்தியமாகக் கூட குறைத்துவிடாமல், தனிக்கச்சேரி செய்தே ரசிகர்களைக் கவர்ந்த வயலின் மேதைகள் இல்லாமற் போய்விடவில்லை. லால்குடி குடும்பத்தினர், எம்.எஸ்.கோபால  கிருஷ்ணன், எல்.சுப்ரமண்யம் சகோதரர்கள், குன்னக்குடி வைத்யநாதன், மைசூர் சவுடைய்யா, மைசூர் நாகராஜ் போன்ற பலர் முன்னணி வயலின் வித்வான்களாகப் போற்றப்படுகின்றனர்.

அந்த வரிசையில், எல்.சுப்ரமண்யத்தின் சகோதரி மகள்களான டாக்டர் லலிதா, டாக்டர் நந்தினி இருவரும் இன்றைய தலைமுறையின் சிறந்த வயலின் கலைஞர்களாக அங்கீகாரம் பெற்றுள்ளனர்.  வடஇந்திய இந்துஸ்தானி இசை மட்டுமின்றி, ஜாஸ், ப்ளெமிங்கோ என்ற ஸ்பானிஷ் இசை, சைனீஸ் பெண்டகொனிக் இசை, லண்டனில் ட்ரினிடி கல்லூரியில் பயின்ற மேற்கத்திய இசை என உலக இசையின் நுணுக்கங்களை தமது கைப்பிடியில் – இல்லை இல்லை – தமது விரல் நுனியில் வைத்திருக்கின்றனர்.  பிரும்மகான சபை இசை வளர்ச்சிக்கு செய்து வரும் சேவை மகத்தானது. அதிகம் நடைமுறையில் இல்லாத வீணை கச்சேரி, வயலின் தனிக்கச்சேரி இவற்றிற்கு மேடையளித்து வருகிறது. (வருடந்தோறும் பத்து நாட்களுக்கும் மேல் நாகஸ்வரக்கச்சேரி பிரம்மகான சபை ஆதரவில் நடக்கிறது என்பது ஒரு கூடுதல் செய்தி.)

சென்ற மாதம் ராயப்பேட்டையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் அரங்கில் டாக்டர் லலிதாவின் வயலின் கச்சேரி இந்த சபாவின் ஆதரவில் நடந்தது. இரண்டு மணி நேரமும் இனிய இசை ஆறு பெருக்கெடுத்தது.  கச்சேரியின் ஆரம்பமாக “மஹாகணபதிம்’ என்ற நாட்டை ராக க்ருதி கம்பீரமாக நடைபோட்டது. விறுவிறுப்பான ஸ்வரங்கள். அடுத்து பகுதாரி ராக ஆலாபனையும் “ப்ரோவபாரமா ரகுராமா’ என்ற தியாகராஜரின் கீர்த்தனையும் லலிதாவின் இசை பாரம்பரியத்தை எடுத்துக் காட்டியது.  தஞ்சை நால்வரில் ஒருவரான பொன்னையா பிள்ளையின் க்ருதியை அடுத்து கையாண்டார். தஞ்சை பிருகதாம்பாள் மீது இயற்றப்பட்ட நீலாம்பரி ராக க்ருதியை சிறிது விளக்கிவிட்டு வாசித்தார். மிக அருமை.  “சங்கீத கீத வாத்ய வினோதினி’ என்ற வார்த்தைகளையும் அவற்றின் ஸ்வர அமைப்புகளையும் சற்றே விளக்கி, பிறகு வாசித்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து வாசித்த “ராமங்கத சுதா’, பட்டணம் சுப்ரமண்ய அய்யரின் ஜாவளி, ஸ்வாதிதிருநாளின் கிருதி, தேஷ் ராக திருப்புகழ் அனைத்துமே கச்சிதமாகவும், ராக பாவத்தோடும் இருந்தன. ஒவ்வொரு உருப்படியின் ஆரம்பத்திலும் அந்த பாடலின் இசை மற்றும் வார்த்தைகளின் உயர்வை, தனித்தன்மையை சுருக்கமாக விளக்கியது பாராட்டவேண்டிய நல்ல யுக்தி. மனதுக்கு நிறைவான ஒரு கச்சேரியைக் கேட்ட திருப்தி ஏற்பட்டது.  பாராட்டுக்கள் கலைஞர் லலிதாவிற்கு மட்டுமல்ல… ஏற்பாடு செய்த சபா பொறுப்பாளர்களுக்கும்தான்!

ஜெர்மனி நாட்டில் உருவாகி  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி  தீட்சிதரின் சகோதரரான பாலுஸ்வாமி தீட்சிதரால் தென்னிந்திய இசைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு  திகழும் வயலினின் நிலை என்ன? – சந்திரிகா ராஜாராம்  படம்: அண்ணாமலை